******************
சிப்பிக்குள் முத்து வரும் நாமறிவோம்
சிறு கூடல் பட்டியலும் முத்து வந்தது – அது
முத்தையாவாகப் பிறந்து வளர்ந்தது
மொட்டாக மலர்ந்த எட்டாவது பிள்ளையாக..
வாழ்வின் ஏற்ற இறக்கங்களெல்லாம்
தாழ்வாக்கவில்லை
தடம் பதிக்க வழி வகுத்தது
கன்னியின் காதலியைக் கற்பனையாக்கி
கலங்காதிரு மனமே என
அன்னைத் தமிழால்
ஆறுதல் உரைத்தது
கண்ணதாசனால் காசினிக்குச் சிறப்பு உண்டு
க என்னும் எழுத்தால் கண்ணதாசனுக்குச்
சிறப்பு உண்டு
தனிப் பாடலால் தரணியை ஆண்டு
திரைப்பாடலால் சிகரம் எட்டி
தமிழின் தேனிசையில்
தத்துவம் சொல்லிய
வித்தகக் கவிஞன்
காதலின் இனிமை
காலத்தின் நிலையாமை
வாழ்வின் உண்மை
யாவும் கலந்து கருத்துப் பெட்டகமானது
வாழ்வின் சிக்கல்களுக்கு வழிகாட்டி
துன்பம் வந்தால்
துணிவூட்டி
சிந்தனைக்குச் சிறகு தந்த சிற்பி!
மையூற்றும் எழுதுகோலில் தமிழூற்றி எழுதியவன்!
தவம் செய்து தாய் பெற்ற பிள்ளை உலக இயல்பு
காலங்கள் ஓடியது
நிலைமை மாறியது
தமிழ்த் தாய் தவமிருந்து
பிள்ளை பெற்றாள்
கண்ணதாசன்
என்று பெயர் வைத்தாள்
திரைவானில் ஒளி நட்சத்திரமாய்
தனிக் கவிதையில்
தரணிக்கு வழிகாட்டியாய்
எழுத்துப் பணியில் இமயமாய்
என்றென்றும் இருப்பார் புதையலாய்.
காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும் கண்ணதாசன் என்ற பெயரே காசினியை ஆளும்
நூற்றாண்டுகள் பல கழியும்
போற்றும் புகழோடு கவி பல வருவர்
கவி பாட கலங்கரை விளக்கமாகி
காலம் தோறும் இவரே
கருத்தினில் இருப்பார்
தனை வளர்க்கும் அறிஞர்களை
தமிழன்னை வாழ்த்திடுவாள்
கண்ணதாசன் கவியால் தான்
தமிழன்னை வளர்ந்திடுவாள்.
**************************************
தமிழ்நிலா
