” விதைக்கப்பட்ட அழியாத
விருட்சமே…! ” கண்ணதாசன் கவிதை- முனைவர் அ.மதலேன், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி கடலூர்-1.
சிறுகூடல் பட்டி முத்தையா நீ
எங்கள் முத்தமிழ்த் தாய்
ஈன்றெடுத்த சொத்தையா!
படைப்பவனே பிரம்மன் நீ
கவி உலகின் பிரம்மன்!
வாழ்க்கை யதார்த்தத்தின் நாயகன் நீ…
அதனால் தான்
தத்துவக் கவிஞனாய் மிளிர்கிறாய்!
காதலைப் பாடுவதில் காவிய
காதல் நாயகன்!
தாலாட்டுப் பாடுவதில்
ஆண்மையிலும் ஒரு பெண்மை
உன்னுள்…!
சோகக்கவியில் துன்பச் சுவையைப்
பிழிந்து வடித்து வார்த்து விடுகிறாய்!
சமத்துவம் பேணுவதில்
சாமானியன் நீ…!
பகுத்தறிவு பகலவன்
அதே தருணம்…
ஆன்மீக தத்துவ ஞானியும் நீ!
உன் ஒவ்வொரு சொல்லிலும்
சந்தாயத் ததும்பல் தான்
அதனால் தானே…
பாமரனையும் ரசிக்க வைத்தது
உன்னுடைய இலக்கிய நயமிகு
சொல்லாடல்!
தமிழின் தோளில்
உலகம் கண்ட
கவியரசனே!
சொற்களை எழுதவில்லை நீ…
உயிர்களை எழுப்பி இருக்கிறாய்!
உன் எழுத்து
மனித மனங்களின் உணர்வுகளை
பருகி இருக்கிறது!
சிதைந்த இதயத்தின்
சுவாசத்தைச் சொற்களாக்கி
தடுமாறும் உயிர்களுக்கு
தன்னம்பிக்கை தீபம் ஏற்றி மனித
மனத்தின் முரண்பாடுகளை
உறவுகளின் நிலையாமையை
வாழ்க்கையின் நிதர்சனத்தை
ஆழமான வலியுடன் வெளிப்படுத்தி,
வலியை மறைக்க அல்ல…
வலியை வெல்லக்
கற்றுக்கொடுத்திருக்கிறாய்!
கவிஞனே… உனக்கு
வறுமையும் வார்த்தைகளைக்
கற்றுக் கொடுத்திருக்கிறது!
வாழ்க்கையும் உணர்வுகளை
வார்த்துக் கொடுத்திருக்கிறது!
தமிழின் ஆன்மாவை
எழுத்துகளால் உயிர்பித்து விட்டாய்!
