நேற்று நானும் ஆம்பலும்
உள்ளத்தின் தவிப்பு தவிப்பின் உயிர்ப்பு..
ஒரு நிகழ்வின் பின்னால் மறைந்திருக்கும் கேள்வி
கண்ணதாசனைப் போற்றும் நூற்றாண்டு உலக சாதனையின் ஒரு நாள்
தடைபடும் போது அந்நேரம்
உண்மையான உறவுகள் என்ன செய்யும்?
சாதனையின் ஓட்டம் தடைபடாமல் நகர்த்திச் செல்ல முன் வருமா உறவுகள்..
ஊர்கூடி இழுத்தால்தானே தேரின் ஓட்டம் தன்னிடம் சென்று சேரும்..
அதுதானே
ஒரு அமைப்பின் மீதான பற்றும்,
ஒருங்கிணைப்பாளர்களின் உழைப்பின் மீதான
உண்மையான மதிப்பும்!
நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை
ஒரே குடையின் கீழ் இணைத்து,
ஒரு நூற்றாண்டு விழாவை
உலக சாதனை நோக்கி நகர்த்துவது
வெளியில் இருந்து பார்ப்பதற்கு
ஒரு நிகழ்ச்சியாகத் தோன்றலாம்.
ஆனால் அதன் பின்னால்—
எத்தனை அழைப்புகள்?
எத்தனை நினைவூட்டல்கள்?
எத்தனை ஒருங்கிணைப்புகள்?
எத்தனை எதிர்பார்ப்புகள்?
எத்தனை மனத்தவிப்புகள்?
இவற்றைச் சுமப்பவர்கள்
நிறுவனர்… தலைவர்…
ஒருங்கிணைப்பாளர்கள்…
அவர்களின் தவிப்பை உணராமல்
“இன்றைய வாய்ப்பை
எப்படியாவது தமக்கான
அங்கீகாரமாக மாற்றிக் கொள்வோம்”
என்ற எண்ணம் மேலோங்கும்போது
ஒரு நுட்பமான கேள்வி எழுகிறது:
நாம் நிகழ்வுக்காகவா?
அல்லது நிகழ்வு நமக்காகவா?
ஒரு உயிரின்
கருவை கலைத்து,
இன்னொரு உயிருக்கு உணவூட்டுவது போலத்தான்
குழந்தை கேட்டது
லாலிபாப்…
கையில் சாக்லேட் கொடுத்து
“இதோ, இதுதான்!”
என்று சமாதானப்படுத்துவது போல…
பசியால் தவிக்கும் உயிருக்கு
உணவு கொடுக்காமல்
இறைவனுக்கு படையல் இடும் மானிடம்…
நிகழ்வின் தேவை அறிந்த செயல்பாடு
வெற்றிக்கு அழைத்துச் செல்லும்…
ஒரு உலக சாதனைப் பயணத்தில்
நம் பங்களிப்பு தூணாக தாங்கி
நிகழ்வின் நம்பிக்கையை காப்பதே
நமக்கான முதல் அங்கீகாரம்.
“நம்மை நம்பி கொடுத்த முன்னெடுப்பை
தோள் கொடுத்து தாங்கு
என்று மனசாட்சி சொல்லும் அந்த நொடியே
மிகப் பெரிய அங்கீகாரம்!
தடையான நிகழ்வு தளராமல்
நகர்த்திச் செல்லும் பாதை
தனி பாதை தேடாது நேர்த்தியாய்
காப்பது தானே உறவு..உறவின் வலிமை…
நிகழ்வின் நோக்கம்
புகழைவிட மேலானது என்பதை உணர்வதே
உண்மையான தமிழ்ப்பணி.
ஆகவே…
நிகழ்வை பயன்படுத்தி,
நிகழ்வுக்கு பயன்படுவோம்.
அங்கீகாரத்தைத் தேடாமல்,
நம்பிக்கைக்குத் தகுதியானவர்களாக இருப்போம்.
புகழ் ஒலிப்பதைவிட,
தமிழின் பெயர் ஒலிக்கட்டும்!
கண்ணதாசன் நூற்றாண்டை முன்னிட்டு
தொடங்கிய இந்தப் பயணம்
ஒருவரின் வெற்றிக்காக அல்ல…
நூற்றுக்கணக்கான இதயங்கள்
ஒரே நோக்கத்திற்காக இணைந்த
தமிழின் வெற்றிக்காக!
அந்த உணர்வோடு பயணித்தால்தான்
உறுப்பினர்கள் உறவுகளாவார்கள்;
உறவுகள் ஒரு இயக்கமாவார்கள்;
இயக்கம் ஒரு வரலாறாகும்.
இது இந்த உள்ளத்தின் தவிப்பு தவிப்பின் உயிர்ப்பு..
