கவிதை தலைப்பு:
எனது வீடு
நமது நாடு
-எது சுதந்திரம்?
தாயின் கருப்பையில் இருந்து,
பிரித்தென்னை எடுத்த போது,
தவித்தழுது ஏங்கும் என்னை,
அரவணைத்து அணைத்துக் கொண்ட,
இரண்டாம் கருவறை, அல்லவா வீடு!
அத்தகைய தாயும் கூட என்னை,
பத்து மாதங்கள் மட்டுமே சுமந்து,
பெற்றெடுத்து விட்டால்;சுமையோ இனி இல்லை.
ஆனால்,
நரை விழுந்த பிறகும் கூட,
தளராமல் எனை நிதம் தாங்கும்,
தெய்வீக ஆலயம் அல்லவா வீடு!
பாடி, ஆடி, ஓடி திரிந்ததும் இங்கே,
பாட்டி கதை கேட்டு வளர்ந்ததும் இங்கே,
வழி தவறும் எனைத்
திருத்தும் உறவுகள் இங்கே,
வாழ்வின் நிறை குறைகளை பயின்றதும் இங்கே,
எனக்கென்று வாழ்வோரைக் கண்டதும் இங்கே,
எங்கலைந்த போதும் பின் திரும்புவது இங்கே,
நிகரில்லா பாசங்கள்
நிலைப்பதும் இங்கே,
நிம்மதி எனும் சொல்லின் முழு பொருள் இங்கே,
நான் என்னை, யார் என்று உணர்ந்ததும் இங்கே,
நாடென்னும் தாய் பற்றி அறிந்ததும் இங்கே….
தேவலோகம் கூட, வானேறி சென்றாலும்,
ஆகிடுமோ அவையெல்லாம் , உன் வீடாகத் தான்?
தேசங்கள் எல்லாம் தேடி அலைந்தாலும்,
கிட்டிடுமோ வீட்டிலுள்ள சுதந்திரமும் தான்?
ப. பவ்யஸ்ரீ,
கோயம்புத்தூர் மாவட்டம்,
இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு,
புசகோ கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி,
