நா நலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று (குறள் 641)
சொல்வளங்களில் எல்லாம் சிறந்த சொல்வளம் நா நலம் என்னும் சொல்வன்மை.
நா நலம் நாவன்மை என்பது ஒருவருக்கு வாய்க்கப்பெற்றால் அது அவர் பெற்ற பேறு தான்
நா என்றாலே நாக்கு. நான்கு. நான்கில் ஒரு பங்கு எனப் பல பொருள் இருப்பினும் வள்ளுவர் சுட்டிய நா என்பதற்கு சொல் என்றே பொருள்.
அந்த சொல்லாற்றலை உலகப் பொதுமறை திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் கவிதைகளாக்கி அதைப் படிப்போர் அனைவரையும் ரசிகர்களாக்கி உள்ளத்தை கொள்ளை கொண்டுள்ளார் இந்த புத்தகத்தின் ஆசிரியர்.
திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று கேட்போருக்காக அதில் இருக்கும் ஒரு அதிகாரத்தை மட்டும் சற்றே விரிவாகப் பார்த்தால்
முதல் அதிகாரம் எதைச் சிறப்பிக்கிறது.?
கடவுள் வாழ்த்தா?
இறை வணக்கமா?
பொதுவாக முதல் அதிகாரத்தின் தலைப்பை கடவுள் வாழ்த்து என்பார்கள்.
ஆனால் அதில் இருக்கும் எந்த குறட்பாவிலும் கடவுள் என்ற சொல் இடம்பெறவில்லை என்பதை அறிவீர்களா?
இது பல காலமாக கற்றுத் தெளிந்த ஆன்மீகத் தமிழ்ச் சான்றோர் முதல்
கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கும் நாத்திகர் வரை இருக்கும் அனைவராலும் எழுப்பப்படும் ஒரு விடை காணாத கேள்வியே.
இவை ஒரு புறம் இருக்க
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்
இருக்கும் பத்து குறட்பாக்களிலும் இறைவனை எந்த இடத்திலும் வாழ்க என்று திருவள்ளுவர் குறிப்பிடவில்லையே ஏன் என்று சிந்திப்போமா?
இறைவன் என்பவன் எவரின் வாழ்த்துக்கும் அப்பாற்பட்டவன். அவன் அனைத்து இனத்தையும் வாழ்விக்க வந்த மகான் என்பதே திருவள்ளுவரின் ஒரே நோக்கமாக இருப்பது தெளிவு.
அத்தகைய வாழ்த்தும், தகுதியும், தயாள குணமும் கொண்டவனை வாழ்த்தும் தகுதி மனித இனத்துக்கு அறவே இல்லை என்பதே அவரின் துணிவு.
எனவேதான் அந்த எல்லையறு பரம்பொருளை வாழ்த்தி அல்ல
ஏத்தித் தொழில் வேண்டும் என்று கருதியுள்ளார்
உலக உயிர்களையெல்லாம் காக்கும் பேராற்றலைக் கொண்ட அந்த இறைவனை கடவுள் வாழ்த்துப் பாக்கள் அனைத்திலும் வள்ளுவர் தன் கவிதைப் பேராற்றலால் அழகாக காட்சிப்படுத்தி இருப்பதை காண முடிகிறது.
செய்யுளில் பொருட்செறிவு என்பது கவிஞன் கருதியமைத்த பொருளோடு குறிப்புமீ உள்ளுறையுந்தோன்ற நிற்றல் என இலக்கண நூல்கள் கூறும். இப்பொருட்செறிவு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் மேலோங்கி நிற்கிறது.
எல்லா சமயத்தினரும் அவரவர்களின் முரண்பட்ட கடவுள் கோட்பாட்டுக்குக் குறள் பொருந்துவதாக உரிமை கொண்டாடுகின்றனர்.
இப்படி வெவ்வேறு சமயத்தார் பெயர் தோன்றும் படி கூறி முடிவில், பயில்வோர் மனதில், பொதுமைக் கடவுள் தோன்றும் படி செய்து விடுவார் வித்தகக் கவிஞரான வள்ளுவர்.
அவர் எழுதிய திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் கவிதைப் பூக்களால் அழகான மாலையை தொடுத்திருக்கிறார்
இக்கவிதை தொகுப்பின் நாயகி, கவிதாயினி ஜஸூரா ஜலீல்.
வையகத்துக்கு கடவுளே ஆரம்ப புள்ளியில் ஆரம்பித்து,
இன்னும் விடியாது நீளட்டுமே
ஊடலோ காதல் இன்பத்தை பெருக்கிடும் போதையே என்று முடித்து,
கடவுள் வாழ்த்தில் துவங்கி ஊடலுவகை வரை அறம், பொருள், இன்பம் என அத்தனை அதிகாரத்துக்கும் மிக மிக அழகான கவிதைகளால் அமுது படைத்திட்டிருக்கிறார்.
சொற்சுவையும் பொருள்சுவையும் ஒருங்கே அமைந்து தேனில் விழுந்த பலாச்சுளை போல தித்திக்கிறது.
வாழ்க வாழ்க அவரின் சேவை
அது உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் தேவை
என்று வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்
முனைவர் ரவி கோவிந்தராஜ்
(Dr.Ravi Govindaraj
Ph.d, MBA Hr, MBA Training, MBA ISO, MBA Fire Management, MBA Counselling, MBA Labour Law, Lead Auditor for ISO 9001,14001,18001, 45001, 22000,50001 & 31000
Food Safety Level 1 to 4
HACCP level 1 to 4.
IOSH & NEBOSH)
தலைவர் ஆம்பல் தமிழ்ச்சங்கம் கத்தார்
