ஆம்பல் தமிழ்ச்சங்கம், Integral Training Centre (ITC) மற்றும் ITC Junction இணைந்து நடத்தி வரும் நூறு நாள் உலகச் சாதனை இலக்கியப் பயணத்தில் ஒரு மறக்கமுடியாத அனுபவம்
எழுதியவர்:
முனைவர் தி. க. நாகராஜன்
மாவட்ட நிர்வாகி, ஆம்பல் தமிழ்ச்சங்கம் – விழுப்புரம் மாவட்டம்
கல்வி, இலக்கியம், பண்பாடு, தமிழின் பெருமை ஆகியவற்றை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கில், கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கம், Integral Training Centre (ITC) மற்றும் ITC Junction இணைந்து நடத்தி வரும் “100 நாள் உலகச் சாதனை இணையவழி வெபினார் தொடர்” ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல; அது தமிழின் ஆன்மாவை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் இலக்கியப் பயணமாகும்.
இந்தப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் புதிய சிந்தனைகள் மலர்கின்றன. திரைக்காட்சி, இலக்கியக் காட்சி, சமூகப் பார்வை, வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் அனுபவங்கள் எனப் பல்வேறு பரிமாணங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, தமிழின் செழுமையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.
ஆம்பல் – கத்தார் தமிழ்ச்சங்கம், Integral Training Centre (ITC), ITC Junction இணைந்து நடத்தி வரும் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு – 100 நாள் உலகச் சாதனை இணையவழி வெபினார் தொடர் (17.07.2026 முதல்) என்னை ஒரு புதிய இலக்கிய உலகிற்கே அழைத்துச் சென்றுள்ளது.
இது ஒரு இணையவழி நிகழ்ச்சி மட்டுமல்ல; திரைக்காட்சி, இலக்கியக் காட்சி, சமூகக் காட்சி, சரித்திரச் சாதனைக் காட்சி, சுற்றுலா எனப் பல பரிமாணங்களை உள்ளடக்கிய மாபெரும் அறிவுப் பயணம்.
“பாரியின் தேரேறிப் போனால் நின்று போகும்” என்பார்கள். ஆனால் நான் இன்று பைந்தமிழ்த் தேரேறி உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறேன்.
காற்றில் தென்றலும் கன்னித் தமிழும் கைகோர்த்து வர, புறநானூற்றின் மறவாளும், அகநானூற்றுத் தோழிமாரும், இனியவை நாற்பது இனிமை பாட, இசைத்தமிழ் என்னோடு இணைந்து பயணிக்கிறது. சேரமான் கவரி வீச, சோழரும் பாண்டியரும் பன்னீர் தெளிக்க, கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் நட்சத்திர அட்சதைகளைத் தூவ, வானவில் மாலை சூடியபடி இந்த இலக்கியப் பயணம் தொடர்கிறது.
மகாகவி பாரதியின் “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்ற கனவும், பாவேந்தர் பாரதிதாசனின் கவிச்சித்திரங்களும், வழிநெடுக கதைகள் கோடி கிளுகிளுப்பூட்டி என்னை வழிநடத்துகின்றன.
இந்த மாபெரும் முயற்சிக்கு தலைமை தாங்கி, உலகெங்கும் தமிழர்களை ஒரே மேடையில் இணைத்து வரும் சர்வதேச லெஜண்ட் கோச் முனைவர் ரவி கோவிந்தராஜ் அவர்களின் அர்ப்பணிப்பும், தொலைநோக்குப் பார்வையும் இந்த உலகச் சாதனை முயற்சியின் வலிமையாக விளங்குகின்றன.
அதேபோல், கத்தார் ஆம்பல் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பான ஒருங்கிணைப்பும், முனைவர் கமலா முருகன் அவர்களின் அன்பும் ஊக்கமும், இப்பயணத்தை மேலும் இனிமையாக்குகின்றன. இந்நிகழ்வை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து நிர்வாகிகளும், ஒருங்கிணைப்பாளர்களும், பேராசிரியர்களும், பேச்சாளர்களும், பங்கேற்பாளர்களும் இந்த இலக்கியக் குடும்பத்தின் உயிர்நாடிகளாகத் திகழ்கின்றனர்.
தமிழ் ஊறித் திளைப்போர் அனைவரும் ஒன்றுகூடும் இந்த மேடையில், திருக்குறளின் வாழ்வியல் ஞானமும், கவியரசர் கண்ணதாசனின் பண்பழகும் திரையிசைப் பாடல்களும், எண்ணற்ற சிந்தனைகளைத் தூண்டுகின்றன. ஆற்று மணலை எண்ண முடியாததுபோல, இந்நிகழ்வில் கிடைக்கும் இன்பத்தையும் அறிவையும் அளவிட முடியாது.
ஒவ்வொரு மாலையும் ஆறு மணிக்குத் தொடங்கும் கருத்தரங்கம், மறுநாள் நிகழ்வை ஆவலோடு எதிர்பார்க்கச் செய்கிறது. சிலப்பதிகாரத்தின் ஒரு சிறப்பு அதிகாரத்தைப் போலவும், புதிய சிந்தனைக் காப்பியத்தின் புதிய அத்தியாயத்தைப் போலவும் ஒவ்வொரு நாளும் விரிகிறது.
நவரசம் ததும்பும் இந்தக் கருத்தரங்கம், பல்சுவை கதம்பமாக உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை இணையவழி ஒன்றிணைக்கிறது.
ஒரு மணி நேரமாகத் தொடங்கும் நிகழ்வு, இரண்டு மணி நேரமாக வளர்ந்து, மூன்று மணி நேரம் முழங்கினாலும், அது சலிப்பைத் தருவதில்லை. முழுநிலவு தரும் அமைதியைப் போல, தேன்நிலவு தரும் இனிமையைப் போல, தமிழ்நிலவு ஒளிரும் அறிவுப் பயணமாக அது தொடர்கிறது.
நூறு நாட்கள்… நூறு அறிஞர்கள்… நூறு சிந்தனைகள்… இவை அனைத்தும் இணைந்து புதிய காலத்தின் மகாபாரதமாக உருவெடுக்கின்றன. அறிவியல் உலகமும் வரவேற்கும் இணையத் தொழில்நுட்பத்தின் வழியாக, தமிழுக்கு அளிக்கப்படும் அறிவு விருந்து இது. புத்தெழுச்சியும் புத்துணர்ச்சியும் தரும் செவியுணர்வு விருந்து.
பரபரப்போடும், பரவசத்தோடும், பாசத்தோடும் நான் இணைந்து பயணிக்கும் தமிழினத்தின் முகவரியாக ATS மற்றும் ATSQ திகழ்கின்றன. இங்கு பல ஜீவநதிகள் ஓடுகின்றன; பற்பல கருத்தருவிகள் பெருகுகின்றன; பாற்கடலைப் போன்ற அறிவுக் கடல் விரிகிறது; தமிழ்க்கடல் அலைமோதுகிறது.
இங்கு இருப்பவர்கள் அனைவரும் அடக்கம் கொண்ட அதிசய மலைகள்; தேவைப்படும் இடத்தில் வெடிக்கும் எரிமலைகள்; அகர முதல எழுத்திலிருந்து தமிழ் வளர்க்கும் புகழ்ச் சிகரங்கள்.
இந்தக் குழுவோடு என் பயணம் எழில் பயணம்; இளங்காலைப் பயணம்; நெடும் பயணம்; தினமும் புதிதாய் மலரும் பயணம்.
“உவப்பத்தலைக் கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.”
என்ற திருவள்ளுவர் வாக்கை வாழ்வாக்கும் புலவர் பெருமக்கள் இங்கே ஒன்றிணைந்துள்ளனர்.
பிள்ளைத்தமிழின் வாரானைப் பருவம் போல் வரவேற்று, வசை பாடாது இசை பாடி, தாலாட்டாய் தனித்தமிழால் தலைக்கோதி அன்பு பாராட்டும் உள்ளங்கள் இங்கே நிறைந்துள்ளன.
சங்க இலக்கியம், பரணி, சமய இலக்கியம், சிற்றிலக்கியம், காதல் இலக்கியம், புறநானூற்றின் வீரச்சுவை, புதுக்கவிதை, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் என முத்தமிழின் அனைத்து வடிவங்களும் இம்மேடையில் உயிர்பெறுகின்றன.
சந்தத் தமிழையும், சிந்தித்த தமிழையும் அள்ளி வழங்கும் ATSQ வழிப் பயணம், வளர்பயணம். அது இலவசப் பயணம் என்றாலும், அதன் மதிப்பு அளவிட முடியாதது.
இது ஒரு நல்ல இதயப் பயணம். இதமான பயணம். தமிழை நேசிக்கும் உள்ளங்களை இணைக்கும் இனிய பயணம்.
ஆம்… பயணங்கள் முடிவதில்லை!
தமிழோடு தொடரும் இந்த இலக்கியப் பயணமும் முடிவதில்லை!!
முனைவர் தி. க. நாகராஜன்
மாவட்ட நிர்வாகி
ஆம்பல் தமிழ்ச்சங்கம் – விழுப்புரம் மாவட்டம்





