எதிரி என்றைக்கும் எதிரியே .
நண்பர்கள்தான் –
பரிசீலிக்கப்பட வேண்டியவர்கள்.
இந்த சீனப் பழமொழியை
கல்கண்டு இதழின் ஓரம் துணுக்காக வாசித்த 90களின்போது
வகுப்பறை முழுதும் நிறைந்திருந்தவர்கள்
நண்பர்களாகவும் …
பேனாவும் ஜாமின்றி பாக்சும் கடனாகத் தராதவன்களும்
கலையரசியிடம் சிரித்து சிரித்துப் பேசுபவன்களும்
கலையரசியே தேடிப் போய் பேசுபவன்களும் மட்டுமே எதிரிகளாய் இருந்தனர்.
இன்றைய அதிகாலையில்
நாட்காட்டியின் தேதித்தாளில்
அதே சீனப் பழமொழியை சாக்ரடீஸ் சொன்ன கருத்தாக வாசிக்கும்போது
நண்பர்கள் – எதிரிகளாகி இருக்கிறார்களா?
எதிரிகள் நண்பர்களாகி இருக்கிறார்களா? என்ற கேள்வி கையோடு வந்தது.
ஒரு சீனப் பழமொழி
சாக்ரடீஸின் கருத்தாக மாறுவதைப்போல
ஒரு நண்பன் எதிரியாவதும்
ஒரு எதிரி நண்பனாவதும்
அவ்வளவு எளிதானதல்ல.
நண்பர்கள் என்று யார் இருக்கிறார்கள்
என்பதில் துவங்கி
நண்பர்களாய் யார் இருக்கிறார்கள்
என்று நகர்ந்து
நல்ல நண்பனாக நீ இருக்கிறாயா
என்ற கேள்வியுடன்
கண்ணாடியின் முன் வந்து நிற்கிறேன்.
வகுப்பறை முழுதும் நிறைந்திருந்த
நண்பர்கள் எல்லோரும்
உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியே
வந்த பிறகு
உடன் பயின்றவர்கள் ஆகியிருந்தார்கள்.
உயர்நிலைப் பள்ளியில் இருந்து
மேல்நிலைப் பள்ளி நோக்கிப் போனவன்களுக்கு
உயர்நிலைப் பள்ளியிலிருந்து
வேலைக்குப் போனவன்கள்
தெரிந்தவன்களாக மாறிப் போனார்கள்.
மேல்நிலைப் பள்ளியில் இருந்து
கல்லூரிக்கும் –
கல்லூரியில் இருந்து வேலைக்கும்
போனவன்களுக்கு
உயர்நிலைப் பள்ளியோடு
படிப்பை நிறுத்தியவன்கள்
ஊர்க்காரன்களாக மட்டுமாய் ஆனார்கள்.
பத்தாவதுவரை மட்டும் படித்தவன்களுக்கு
பால்ய நண்பர்கள் அதிகமாக இருப்பதும்
பட்டதாரிகளாய் ஆனவர்களுக்கும்,
அரசு ஊழியர்களாயானவர்களுக்கும்
பால்ய நண்பர்கள் என்று
யாருமே இல்லாமல் போவதும் ஏனென்று தெரியவில்லை.
அதே சமயம் –
நண்பர்களால் ஆனவன்தான் நான்.
ஆனால் –
நட்பால் ஆனவனில்லை என்று எழுதும் எனக்கு –
நண்பர்களைப் பரிசீலிக்கவும் தெரியாமல் இருப்பது செளகர்யம்தான்.
நண்பர்களின் நிலை தான் இப்படி எனில்
எதிரிகளின் நிலை எப்படி என்று உற்றுப்பார்த்தேன்.
கலையரசிக்குப் பிடித்தமானவன்
கரன்ட் வேலைக்கு துபாய்க்கு போய் வருவதற்குள்
கலையரசியின் தாய் மாமனுக்கு
உள்ளூரிலேயே அரசு வேலை
கிடைத்து விட்டதால்
எதிரியின் பட்டியலில் இருந்து அவன்
இல்லாமல் போனான்.
எதிரிகளே இல்லாமலும்
பரிசீலிக்கும்படியான நண்பர்களே இல்லாமலும்
வெற்றுத் தாளாய் இருக்கும் இந்த
இனிய வாழ்வின் அதிகாலையில் –
சாக்ரடீஸின் கருத்தாய் நிரம்பி இருக்கும்
இந்த நாட்காட்டித்தாள் மட்டுமே
கசங்கத் தயாராய் இருக்கிறது.
யாருடைய கைகளிலும்
நான் கசங்காமல் போய்விடுவேன் எனில்
இன்னும் பேரழகாகிவிடாதா
இந்த வாழ்வு.?
இளம்பரிதி திருப்பத்தூர் மாவட்டம்