என் தந்தைக்கு நான் எழுதும் கடிதத்தில் அனுப்புநர், அதாவது என்னை இவ்வுலகிற்கு அனுப்பியவரும் பெறுநர், அதாவது இக்கடிதத்தை பெறுபவரும் என் தந்தையே!
நான் பிறந்த உடனே உங்கள் கரங்களில் தவழ்ந்த என்னை குனிந்து முத்தமிட்ட என் தந்தையே, இன்று என்னுடைய பேனா குனிந்து தாள்களில் முத்தமிட்டு, உன்னைப் பற்றி எழுதும் கடிதம்.
உங்கள் கைவிரல்களில் தேய்ந்து காணாமல் போன ரேகைகளும், கால்களில் முளைத்த வெடிப்புகளும் என்னைச் செதுக்கிய உளிகள்!
என்னை வெளுத்ததால் வெளுத்துப் போனது உங்கள் கேசங்கள்.
வரி வரியாய் என்னைச் செதுக்கியதை, உங்கள் நெற்றியில் உள்ள வரிகள் சொல்லும்.
நான் கோவிலுக்கு போவதில்லை மந்திரம் ஜெபிப்பது இல்லை.. நீ இருப்பதால்!
அதனால்தான் பாண்டுரங்கன் என் மனமென்னும் செங்கல்லில் இன்னும் நின்று கொண்டே இருக்கிறான்!
உழைப்பை
நீ உழைத்துக் காட்டினாய்,
சேமிப்பை நீ
சேமித்துக் காட்டினாய், ஒழுக்கத்தை நீ வாழ்ந்து காட்டினாய்!
தாய் ஊட்டிய சோற்றினால் இந்த உடல் வளர்ந்தது,
நீ ஊட்டிய தன்னம்பிக்கையால் என் உலக வாழ்வு சிறந்தது!
எனது ஒவ்வொரு செயலிலும் உன்னுடைய தாக்கம் இருக்கின்றது.
காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை ஒரு மென்மைத் தன்மையுடன் நீ அணுகும் விதம் என்னை கவர்ந்தது. வாழ்க்கைச் சக்கரத்தில் நான் வளமுடன். வாழ்வதற்கு ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் நீ!
உன் வியர்வைத் துளிகள் என் வளர்ச்சிக்கு உரம்!
உன்னுடைய வெடிப்பு விழுந்த பாதங்களில், நரம்பு தெரியும் கைகளில், நரை விழுந்த கேசத்தில் உன் உழைப்பின் வரலாறு அமைதியாக குடி கொண்டிருக்கிறது!
குடும்பம் எனும் சிலையை உருவாக்க உன்னையே சிற்பியாக மாற்றிக் கொண்டாய்!
என்னை எதிர்பார்த்து பெற்றெடுத்தவள் அன்னை ,
என் எதிர்காலத்தை பெற்று தந்தவர் நீ!
சுவாமிநாதனுக்கும் நாதனே ,
தந்தையே, உன் தாள் பணிந்து வணங்குகின்றேன்.
ஆசிரியர் சிற்பி *
மதிப்புறு முனைவர்**
நீ.சங்கர் ,
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
ஜாகிர் வெங்கடாபுரம், கிருஷ்ணகிரி.
