உயிர் தந்து, உலகத்தே உய்விக்கும் வழிநல்கி வாழ்வித்த,
என் அப்பனுக்கு உயிர் எழுத்து பன்னிரெண்டில்,
அவன் தாள் வணங்கி, மாண்பது போற்றி வரைந்திட்டேன் ஓர் மடல்.
சில நொடிகள் ஒதுக்கி திறப்பீர் உம்செவி மடல்…
அ வனியில் அச்சம் இன்றி நடைபயில வைத்தவன் நீ..
ஆ துரம் காட்டி எம்மின் ஆற்றலை உணர்த்தியவன் நீ..
இ ன்சுவை கன்னலை இல்லத்தில், இன்னலிலும் காட்டியவன் நீ..
ஈ ட்டியென இடர்வரினும் இடரகற்றும் எண்ணம் வளர்த்தவன் நீ..
உ ற்றாரும், சுற்றாரும் நாளும் உனைநாடும் நல்வழிகாட்டி நீ…
ஊ ட்டிய உணவில் அறிவும் கண்ணியமும் கலந்தூட்டியவன் நீ…
எ ஞ்ஞான்றும் எங்கள் நலவாழ்வு சிறந்திட உழைத்தவன் நீ..
ஏ திலார் புறங்கூற ஏலாது வரலாறு படைத்தவன் நீ…
ஐ யம்திரிபற தெளிந்து, எடுத்த செயல்யாவும் முடித்தவன் நீ..
ஒ றுத்த தளைகளை ஒப்பாரிலா பண்பாலே வென்றவன் நீ..
ஓ ங்கியுயர்ந்த செம்பணியாலே ஊற்றாய் எந்தன் உள்ளத்தில் நீ..
ஔ வியம் விலக்கி, அன்பை பெருக்கி பாரினில் வாழ்ந்தவன் நீ…
நீங்கா நினைவலைகளுடன்,
-கவிப்பேரிகை இரா.ஆனந்த், பி.டெக்.
மாடம்பாக்கம், சென்னை-126
அலைப்பேசி : 9344958082
