பூந்தளிர் காலத்தில்
சக்கரமில்லா வாகனம்
வளரிளம் பருவத்தில்
நிகரில்லா நாயகன்
பள்ளிப் பருவத்தில்
வரம்தரும் பகவான்
கல்லூரிக் காலத்தில்
வரவுக்கான இயந்திரம்
வாலிப சேட்டையில்
வறுத்தெடுக்கும் வில்லன்
கரையேறும்வரை
கட்டாய காவலன்
கல்யாணம் நடந்தது
களேபாரம் ஓய்ந்தது
கண்கள் தேடின…
அப்பாவைக் காணவில்லை
ஒருவர் ஓடி வந்தார்
காதில் கிசுகிசுத்தார்
ஐய்யோ என் கடவுள்
எங்கோ போறாராமே
அலறியடித்துக் கொண்டு
ஓட்டம் பிடித்து
கண்டு பிடித்து
கட்டியணைத்து
வாப்பா நான் இருக்கேன்
நான் உன்ன விட்டுட்டு
போக மாட்டேன் பா
நீயும் என்ன விட்டுப் போகாதப்பா
ஏனோ தெரியவில்லை
எதையும் காதில் வாங்காது
தன்பாதையைத் தொடர்ந்தார்
அப்பா ஒரு அதியசம்
அப்பா ஒரு அற்புதம்
அப்பா வல்லினம் அல்ல
எப்போதும் மெல்லினம்
கொஞ்ச தூரம் போனபின்
நெஞ்சு பொறுக்காது
கொஞ்சி மகிழ
வந்தே தீருவார்
அவர்தான் எனது அப்பா !
ஆசிரியர் கோ.தெய்வம்
