நட்பு அதன் வழி நேசம் என்பது அன்பின் இன்னொரு பரிணாமம் தானே. Various shades of love. இருவர் நட்பு பாராட்டுவதற்கு எந்த இலக்கணமும் தேவை இல்லை. பாலினம் வயது கூட தடையாக இருக்காது என்பதை”the intern” பட கதாபாத்திரங்களான பென், ஜுலியானா வாயிலாக இயக்குனர் உணர செய்து இருக்கின்றார்..
ஆண் பெண் நட்புக்கு ஏகப்பட்ட இலக்கணங்கள், கட்டுப்பாடுகள் வகுத்து வைத்திருக்கும் சமூகத்தில் வளர்ந்து எதிர்பாலின நட்பை சகஜமாக ஏற்க முடியாமல் மூச்சு முட்டி கொண்டிருக்கும் மனங்களுக்கு இப்படம் எத்துனை பெரிய ஆறுதல்..
நம் சமூகத்தில் வயதானால் ராமா கிருஷ்ணா என இருக்க வேண்டும். கூடுமானவரை வீட்டில் முடங்கி விட வேண்டும். இதை தான் எதிர்பார்க்கிறது இந்த சமூகம். அவர்களுக்கு வேலை தேவை இல்லை, துணை தேவை இல்லை, சொல்லப் போனால் அவர்களுக்கு என தனித்த வாழ்க்கை எதுவும் தேவையில்லை.
ஆனால் 70 வயதில் புதிய வேலைக்கு தயாராகும் பென் எவ்வாறு இளம் தலைமுறையுடன் இணைந்து வேலை செய்கிறார். வேலை அவருக்குள் என்னென்ன மாற்றம் கொண்டு வருகிறது. அவரை சுற்றி உள்ளோருக்கு கிடைக்கும் பாஸிட்டிவ் வைப்ஸ். அவரின் பாஸ் ஜூலியானாவுக்கும் அவருக்குமிடையே ஒரு மாதிரி தர்ம சங்கடத்தில் ஆரம்பித்து ஆழமான நட்பாக விரியும் இடம் என அழகான நீரோடை போல செல்கிறது..
படம் பார்த்து கொண்டிருக்கும் போது “பென்”னின் மீது காதல் வயப்படாமல் இருக்க முடியவில்லை…