Before sunrise என ஒரு ஆங்கிலப்படம். முன்பின் அறிமுகமில்லாத நாயகனும் நாயகியும் ஒரு நாள் முழுவதும் வியன்னா வீதிகளில் விடிய விடிய பேசி திரிவது தான் கதை.. கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத ஒரு கவிதை போல இருக்கும்..
அதே போல ஒரு உணர்வை மெய்யழகன் படம் தந்தது. டெல்டாவில் பிறந்து வளர்ந்தாலோ என்னவோ என்னால் கதைக்குள், கதை சூழலுக்குள் எளிதில் பொருத்தி கொள்ள முடிந்தது.
பிறந்த வளர்ந்த ஊரை, வீட்டை விட்டு செல்லும் அரவிந்தசாமி 22 வருடங்கள் பிறகு சொந்த ஊருக்கு, தவிர்க்க முடியாமல் ஒரு திருமணத்துக்கு வருகிறார். வந்த அன்றே ஊர் திரும்ப நினைக்கும் அவர் ஒரு நாள் இரவு தங்க நேரிடுகிறது. வேண்டா வெறுப்பாக வரும் அவருக்கு, அந்த இரவு தரும் உணர்வு, அந்த உணர்வை கொடுக்கும் கார்த்தி இருவர் தான் படம் நெடுக..முழுக்க முழுக்க உணர்வாலும் நேசத்தாலும் நிரம்பி வழிகிறது..
அசோகா, திரட்டுப்பால், பாகு கொழுக்கட்டை, கொல்ல பக்கம், அரவிந்தசாமி வீட்டு ஒட்டுதின்னை, கார்த்தி வீட்டு பாத்ரூம், ரெண்டாங்கட்டு, முற்றம், காலவா அடுப்பு, கேணிக்கரை எல்லாம் பழைய பால்ய நினைவுகளை கிளர்த்தி விட்டது.. கம்மனாட்டி, கொழுமோர், கூட்டியாந்து, —-மட்டை என நிறைய எங்க ஊர் வட்டார வழக்கு சொற்கள். அரவிந்தசாமி மாமா மகள் தலை வாரல், கார்த்தி மனைவி தலைக்கு வைத்திருக்கும் கனகாம்பரம் என எங்க ஊரில் மாமி , அத்தை, அக்கா தோற்றங்கள் அச்சு அசலாக. நிறைய மெனக்கெடல்.. நுணுக்கமாக நம்மை டெல்டாவில் உலவ விட்டு இருக்கிறார்..
அடிதடி விறுவிறுப்பை எதிர்பார்ப்பவர்களுக்கான படம் அல்ல.. நிச்சலனமாக தேநீரை மிடறு மிடறாக ரசித்து ருசிப்பவர்களுக்கான படம்..