வேள்பாரி என்றவொரு வெற்றி வீரன்.
வேங்கையென அரசாண்டான். விருப்பம் மிக்க
நீள்மலை(ழை)யை நேசித்தான்.நீண்ட நேரம்
நெஞ்சுரத்தால் போரிட்டான்.நேர்மை மிக்க
வாள்வீசி மூவேந்தர் வகுத்து வந்த
வழிவகையை முறியடித்தான். வலிமை கொண்ட
ஆள்… ட்..பலத்தால் அனைவரையும் அஞ்ச வைத்தான்.அவனுடைய புகழ்கூறும் அழகு நாவல்.
பெருஞ்சித்திரனார் பாடிய புறநானூற்றின் குலப் பாடலுடன் தொடங்குகிறது.இந்த நூலின் பறம்பு மொழியை உள்வாங்கி படித்துப் பாணராய்ப் புத்தகத்திற்குள் நுழைந்து வாசிக்கத் தொடங்கிய பிறகு இயற்கையின் மீது இருந்த காதல் இன்னுமின்னும் அதிகரித்துச் சென்றது. ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் வரும் கம்சலை…..நடிகர்… தலைவர் எம்.ஜிஆர் மேல் பைத்தியமாகி உண்மையிலேயே பித்துப் பிடித்ததைப் போல் எனக்கும் வேள்பாரி என்ற வீரயுக நாயகனின் மேல் ஏகாந்த காதல் பிறந்து… பித்துப் பிடித்தது என்று சொல்லலாம். பாரியோடு சேர்ந்து மலை ஏறுவது போலவும் இறங்குவது போலவும் கனவுகள் புடைசூழ இரவு பகலாக வேறு சிந்தனையின்றி வாசித்து வந்தேன். ஆசிரியர் சு. வெங்கடேசனின் சுவையான எழுத்தும்… ஏற்ற இடங்களில் எழுத்திற்கு தகுந்த ஓவியமும் கற்பனையில் மூழ்கடித்துக் களிப்பைத் தந்தது. இயற்கையோடு இணைந்து காட்சியைக் கற்பனை செய்துப் படித்து வரும் போது அங்கு அதே காட்சியை ஓவியமாக்கி மனதை வசீகரித்துப் படிமங்களாகக் காட்சிப் படுத்திருக்கும் கைவண்ணம் கவின்.
புளி பிரண்டை துவையலுடன் எச்சில் ஊற தேங்கள்… தேறல் கள்ளின் மயக்கத்துடன் எவ்வி கொடுத்த பூண்டு சாற்றையும் சேர்த்துக் குடித்து அதிமதுர சுவையில் மூழ்கி மயங்கி விட்டேனோ என ஐயம் கூட அடிக்கடி வந்து சென்றது.
கண்ணிமையில் பறம்பினை அடைகாத்து அதனை கழுகு போன்ற எதிரிகள் கொத்தி செல்லா வண்ணம் காக்கும் தாய்மை உணர்வுமிக்க பாரி பறம்பு மலையின் பகுதி முழுவதும் ஆட்சி செய்தான். பல்வேறு குலங்களைப் பாதுகாத்தான் .
“இயற்கைக்கு எதிராக இம்மியளவும் செயல்பட மாட்டான் .பெருமை அடைந்தான் பேதம் பார்க்கான்.
நல்ல மன்னன் சிறந்த தமிழன். திண்மை மிக்கான். செம்மை மொழியை வளர்த்தான். மறக்க முடியா வீரன்.மாண்புமிக்கான்.மக்கள் போற்றும் வள்ளல். கள்ளம் அறியான் கனிந்த மறவன். காலம் கடந்து வாழும் வள்ளல்.தன்மை வாய்ந்த அரசன் வாய்மை பண்பு மிக்கான். உள்ளம் தூய்மை உயர்ந்த எண்ணம் உலகம் வியக்கும் நேயன் .அள்ளிக் கொடுத்தான். அன்பை விதைத்தான் அழகாய் இயற்கை படைத்தான்.”
இப்படிப் பாரியைப் பற்றி பாடிக்கொண்டே செல்லலாம் போன்று உள்ளது.
முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி என்று பள்ளி நாட்களில் பாடப் புத்தகங்களில் படித்துள்ளேன் அதற்கான விளக்கத்தை இந்த வேள்பாரியில் ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் மூலம் தான் அறிந்து கொண்டேன்…முல்லைக் கொடிக்கு முழுதாய்த் தேரை முனைந்து கொடுத்த தலைவன். சொல்லின் கபிலர் சிறந்த தோழன். துணையாய் வாழ்ந்த புலவன் வெல்லும் தோலால் வேங்கை யாக வீரம் காட்டி வாழ்ந்தான். நல்லோர் போற்றும் நற்கோல் ஏந்தி நன்றே நாட்டை ஆண்டான். இப்படியாக எந்த நோக்கில் வாசித்தாலும் பாரியை உள்ளக் கிடக்கையில் உவகையுடன்
அமர்த்திக் கொண்டு தான் படிக்க முடிந்தது.
குலத்தின் சின்னம்மாய் உச்சி முதல் உள்ளங்கால் வரை மருத்துவமாய் மகத்துவமாய் உள்ள பனையின் சிறப்புகளைக் கதையில் ஆங்காங்கே பதிய வைத்துள்ளார். அத்தனையும் வாழ்வில் அறத்தைப் போதிக்கும் பகுதிகளாக உள்ளன.
பறவைகளின் அசைவுகளையும்.. தன்மைகளையும் கொண்டு மழையின் அளவை நிர்ணயித்தல்.. காக்கா விரிச்சியின் கொடூர தாக்குதலில் இருந்து தப்பித்தல்… எத்தனையோ மருத்துவ குணங்களைக் கொண்ட மரங்களுக்கிடையில் உயிரைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லி மரத்தைக் கண்டறிந்து ஒதுங்கி வாழ்ந்தால்.. என்று தினம் தினம் இயற்கையிடம் அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள் அதிகம். கொற்றவை கூத்தின் போது நடைபெறும் கும்மி… சோகத்தைப் பாட்டின் வழியே வெளிப்படுத்துதல் மேலும் காடறியும் பயிற்சியில் வரும் கதைகள் வலிமையை அதிகப்படுத்தும் நுட்பங்கள்
“முருகன்.. வள்ளி,
,பாரி… ஆதினி,
நீலன்… மயிலா,
உதிரன்…அங்கவை “
இப்படி அனைவரின் காதலிலும் கசிந்துருகி போனது மனம்.
பொற்சுவை யாரைக் காதலித்தாள் என்ற விபரம் தராமல் இருந்த போதும்
பொற்சுவை வரும் பகுதியில் அவள் பாரியைக் காதலித்தாலோ அதனால்தான் இறுதியில் தன் உயிரைக் கொடுத்துப் பாரியைக் காப்பாற்றினாளோ என்று நினைத்து
மீண்டும் தேடிப்பார்த்தேன். ஏதும் கிடைக்கவில்லை…. ஆம் படிக்கும் நாமே இப்படி தீராக் காதல் கொள்கிறோம்.பொற்சுவை மட்டும் விதிவிலக்கா என்ன…. என்ற கேள்வியை மட்டும் கேட்டுக் கொண்டேன்.
சோம பானத்தின் சுவையுடன் மணக்கும் குறிஞ்சி மலர்களைப் பாடிய கபிலர் மலையின் மீது ஏறும் காட்சியில் படிப்போரையும் சேர்த்து அழைத்து செல்கிறார்…. (ஆங்…சொல்ல மறந்துட்டேன்.இப்ப எனக்கு கபிலர் பாடிய குறிஞ்சி பூக்கள் 99.. ம் மனப்பாடமாகத் தெரியும். பூக்களின் பெயர்கள் உள்ள பாடல் நாவலில் இல்லை என்றபோதும் தேடி படித்து விட்டேன். நடிகர் சிவக்குமார் மாறி கட..கட வென்று சொல்வேன்.)
……..அவர் உண்ணும் விருந்தை நம்மையும் உண்ண வைக்கிறார். அதாங்க அந்த அறுபதாம் கோழிக்கறியைப் பாரி கபிலருக்கு மட்டும் கொடுக்கவில்லை.
எனக்கும் சேர்த்துத் தான் தந்தான். கபிலருடன் இணைந்து கையில் கறியை வாங்கி உண்டதாகவே உணர்ந்தேன்.
தேவாங்கினை மீட்டு இளமருதன் தலையை வீழ்த்தி வெற்றி பெருமிதத்துடன் ஆலாவில் பறந்து சென்ற நீலனுடன் இரண்டாம் பாகத்திற்குள் நுழைந்த பொழுது ஏனோ ஒரு பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. இன்று பாரி உயிரோடு இல்லை என்பது நாம் அனைவரும் உணர்ந்த செய்தி தான் ஆனாலும் இரண்டாம் பாகம் வரும் போது இவர்கள் மூவரின் கூட்டு படையுடன் வெளிநாட்டுக்காரர்களின் நவீன புதுமுக படைகளும் அணிவகுத்துப் போருக்குப் புறப்பட்டுச் சென்ற போது உள்ளம் பதறியது.பாரி இறந்து விடுவானோ என்ற எண்ணம் தலைதூக்கியதும் அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது. நெஞ்சம் கணத்தது. அப்போது வாசிப்போம் நேசிப்போம் பகுதியில் பலர் வேள்பாரி பற்றி எழுதியிருந்த விமர்சனத்தைத் தேடி படிக்கலாமா?அல்லது கதையின் இறுதிப் பக்கங்களை ஒரு முறை படித்து விடலாமா? அல்லது ஏற்கனவே படித்து முடித்திருந்ததாகக் கூறிய எம் பள்ளி தமிழாசிரியர்களிடம் முடிவு என்னவென்று கேட்கலாமா?அல்லது 100 வாரங்களுக்கு மேலாக வரலாற்றுத் தொடராக ஆனந்த விகடனில் வெளிவந்த போது அதனை படித்தவர்களிடம் கேட்கலாமா?என்று கூட தோன்றியது. ஆனால் அவ்விதம் எதும் செய்யவில்லை அடிமனத்தில் நாள(ஆழ)ங்களுக்குள் முதல் பாகத்தில் பாரியின் போர் திறமையையும் இயற்கையில் உள்ள மலையின் தனித்தன்மையையும் அங்கு வளர்ந்த மரங்களின் மருத்துவ குறிப்புகளையும் பாரி நடத்தும் பண்பட்ட ஆட்சியையும்… பாணர்களுக்கு அளவில்லாமல் கொடுத்துக் கொடுத்து மகிழ்ந்ததையும் நினைத்துக் கொண்டேன். மீன் பிடிப்பதற்காகப் பாரிடம் இருந்து வாங்கிய ஒரு விதையைக் கேட்க நானும் பறம்புக்கு புறப்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். எங்களூரில் மீன் பிடிப்பதற்குச் சீலையை வலையாகவும் திரணையாகவும், அணையாகவும் கட்டி வாய்க்கு ருசியாக மீன்குழம்பு சாப்பிடுவதற்கு பெண்கள் படும் பாட்டைப் பார்த்துள்ளேன். நானும் அவ்விதம் மீன் பிடித்துள்ளேன். இந்த விதை மட்டும் கிடைத்தால் போதும் முள் வெட்டி போட்டு அவரவர் வாய்க்காலில் வாய்க்கணக்கு வைத்திருக்கும் குட்டையில் எளிதாக மீன் பிடித்துத் தினமும் மீன் குழம்பு வைக்கலாம் என்ற கற்பனை உலகத்தில் திளைத்தேன்.
மூவேந்தரும் போர்த்தொடுக்காமல்
பாணராகச் சென்று எதைக் கேட்டாலும் பாரி கொடுத்திருப்பான். இவர்கள் இணைந்து போர் தொடுத்ததால் பாரியும் பதிலுக்குத் தாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். இதில் நிச்சயம் வெல்வான் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்தேன். போர்க்காட்சிகள் கண்முன்னே மாறி மாறி வந்தன. ஒவ்வொரு நாள் போரின் போதும் மூவேந்தர்கள் செய்யும் சூழ்ச்சிகளை இயற்கையின் வழியே துரத்தியும், காற்றின் போக்கிற்கு ஏற்ப போரைக் கையாண்டு எதிரிகளை வீழ்த்த மேலிருந்து போரினை மேற்பார்வை செய்து யூகங்களை ஒலிக்குறிப்பின் மூலம் உணர்த்தும் பாரியின் தனித்துவம் பாராட்டத்தக்கது. இறுதியில் மூவேந்தரும் துரத்தி அடிக்கப்பட்டனர்.
பாரிவேந்தன் வென்றான் என்ற நேர்மறை முடிவு நெஞ்சமெல்லாம் நிறைநதிருக்க நெகிழ்வோடு நன்றி சொல்வேன் ஆசிரியருக்கு… பறம்புமலைக்கு சென்று ஆராய்ச்சி நடத்தி சங்ககால நூல்களை அகழ்ந்தெடுத்து பெரும் விருந்து படைத்த எழுத்தாளர் சு.வெங்கடேசனும் வெற்றி சூட்டும் வீரயுக நாயகன் தான்.
வேள்பாரி வெற்றியின் விருட்சம்.