முதன்முறையாக வயிற்றுப்பாட்டுக்காக அல்லாமல், பாரியையும் அவனது பறம்புநாட்டையும் அளந்து பார்க்க வேண்டும் என்று முடிவோடு ஒருவர் வந்திருக்கிறார். வெளி உலகின் கண்கொண்டு இந்த நாடு இப்போதுதான் பார்க்கப்படுகிறது.
இவர்கள் காட்டின் பழைமையான மைந்தர்கள்தான். ஆனால், காலமாற்றத்தின் கரங்களை இறுகப் பற்றியுள்ளனர். இந்த மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட எத்தனையோ குலங்களின் கண்ணீரும் ரத்தமும் இவர்களை உருமாற்றியபடி இருக்கின்றன.
பத்து ஆண்டுகளாக இந்தக் குலத்தின் தலைவனாக இருக்கிறான் வேள்பாரி. வேளீர்குல வீரன் ஒருவன் எறியும் ஈட்டியைக் கண்டு, வேந்தனே ஆனாலும் விலகி நிற்கும் மனநிலையை உருவாக்கிய மாவீரன் வேள்பாரி.
நாடு என்பது அரசும் அரச நியதியும்தான்' என விதி செய்பவர்களுக்கு மத்தியில்,
நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்’ என நிலைநிறுத்தி உள்ளான். இந்த நிலத்தில் நடந்துவரும் கபிலருக்கு, கண்ணில் படுபவை எல்லாம் ஆச்சர்யத்தையே உண்டு பண்ணின. அதிகாரம் உயிர்பெறாத இடத்தில் அன்பு மட்டுமே தழைத்திருக்கும்.
ஆசை, கோபம், சோகம் எல்லாமே அன்புமயமாக நிகழும் ஓர் உலகின் நிகழ்வைக் கனவில்கூட காண முடியாதே! நிஜத்தில் என்ன செய்வார் கபிலர்? நிலைகுலைந்துபோனார்.
