ஆம்பல், மௌவல்
‘சிவாஜி’ திரைப்ப்டத்தில் ‘பூம்பாவாய்’ பாடலைக் கேட்டு பலருக்கும் ஆம்பல், மௌவல் என்றால் என்ன என்று சந்தேகம் எழுந்தது. சமீபத்தில் என் அலுவலகத்தில் இதைப் பற்றி ஒரு விவாதம் கூட எழுந்தது. அவை இரண்டும் மலர்கள் என்று பலருக்குத் தெரிந்த போதும் அவற்றின் ஆழமான அர்த்தங்கள் பலருக்குத் தெரியவில்லை. அந்த ஆழங்களை ஆராய்ந்த போது கிடைத்த தகவல்கள் இதோ…
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சங்க கால மலர்களைப் பின்வருமாரு பட்டியலிடுகிறார்.
“உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ் ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை, உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம், எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான்பூங்குடகம், எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம், பயினி, வானி, பல்இனர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா, விரிமலர் ஆவிரை, வேரல், சூரல், குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி, குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம், போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி, செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா, தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல், தாழை, தளவம், முள்தாட் தாமரை, ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குழலி, கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை, காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல், பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருங்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும்….”
இந்தக் குறிப்பினைக கலைஞரின் ‘சங்கத்தமிழ்’ இலும் காணலாம்.
மேற்குறிப்பிட்ட செய்யுளில் இவ்விரு மலர்களும் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணலாம். ஆம்பல் மலரை அல்லி மலர் என்றும் அழைப்பர். சங்க காலக் கவிதைகளில் பெண்மையின் மென்மையை ஆம்பல் மலரோடு ஒப்பிடுவது வழக்கம். பொதுவாக ஆண்களை செங்கழுநீர் மலர்களுக்கும் பெண்களை ஆம்பல் மலர்களுக்கும் ஒப்பிடுவர். காரணம, ஆம்பல் இரவில் மலர்ந்து பகலில் கூம்பும். செங்கழுநீர்ப்பூ பகலில் மலர்ந்து இரவில் கூம்பும். அது போல, ஆடவர் பகலில் தம் இல்லத்திற்காக உழைத்துக் இரவில களைத்து வீடு திரும்புவராம். பெண்களோ பகலில் பணிவோடு சமுதாயத்தில் பழகி இரவில் தம் அன்பால் தலைவனைத் தேற்றுவராம்.
இலக்கியத்தில் ஆம்பல் மலர் இடம்பெரும் சில குறிப்புகள்
1) ஐங்குறுநூறு
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்
2) சிலப்பதிகாரம்
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து ருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத்
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து,
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க,
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து
நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது
உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?
திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே.
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மௌவல்
மௌவல் என்றால் ‘காட்டு மல்லிகை’ என்று எங்கோ படித்த ஞாபகம். பெண்கள் சிரிக்கும் போது மல்லிகை மலர்களை அடுக்கி வைத்ததைப் போல இருக்குமாம். அதனால் பெண்களின் சிரிப்பையும் பற்களையும் வர்ணிக்கக் கவிஞர்கள் மௌவல் மலரைக் குறிப்பிடுவர். எட்டுத்தொகை நூல்களில் இதைப் பல இடங்களில் காணலாம்
- கலித்தொகை
அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்,
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்,
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல்,
அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,
சில நிரை வால் வளை, செய்யாயோ!’ என,
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது,
இனி அறிந்தே
அது துனி ஆகுதலே
‘பொருள் அல்லால் பொருளும் உண்டோ ?’ என, யாழ நின்
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?
‘காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு’ என,
ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ?
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?
அதனால்,
எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து
அவவுக் கைவிடுதம்; அது மனும் பொருளே
2) அகநானூறு
‘மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
துணை நிரைத்தன்ன; மாவீழ் வெண்பல்,
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பணைத்தோள்
மடந்தை மாண்நலம் புலம்பச், சேய்நாட்டுச்
செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாய்
வினைநயந்து அமைந்தனை ஆயினை ; மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்- வல்லே,
எழுஇனி, வாழி என் நெஞ்சே!- புரி இணர்
மெல்அவிழ் அம்சினை புலம்ப; வல்லோன்
கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி
மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்,
சுரம்செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை
இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட
மென்புனிற்று அம்பிணவு பசித்தெனப், பைங்கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலில், பரீஇச்
செங்காய் உதிர்த்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து,
இருங்களிற்று இனநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே