இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதியும், உலகின் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ இந்த தினம் நினைவு கூறுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது
ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவார்கள் அவர்களுக்கென்று கொண்டாடப்படும் தினம் தான், இன்று. செப்டம்பர் 5, ஆசிரியர்களுக்கு அவர்களது பணிக்கு, அவர்களது சேவைக்கு, பொறுமைக்கு, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழாவை கொண்டாடுகிறோம்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.
நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் உள்ளது அதனை வடிவமைக்கும் பணியை ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்று கூறுவார்கள். மாணவர்கள் நாளைய உலகின் மனிதர்களாக மாறி, அவரவர்களுக்கு பிடித்த விஷயத்தில் வேலை செய்து, உயர்ந்து நல்ல இடத்திற்கு வருவதில் பெற்றோருக்கு உள்ள அதே பொறுப்பும், உரிமையும் ஆசிரியர்கள் இடத்தில் உள்ளது, ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் பேரின் வாழ்க்கைகள் அவர்கள் கைகளில் ஒப்படைக்க படுகின்றன. கல்லாக, பாறையாக பள்ளிக்கு வரும் நம்மை, செதுக்கி சிலையாக வெளியில் அனுப்பும் பெரும் வேலையை அயர்வின்றி செய்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக இது அனுசரிக்கப் படுகிறது.
