மலைநாட்டின் வரலாறு
செதுக்கப்பட்டபோது
செம்மன் சாலைகள்
செப்பணிடப்பட்டபோது
இரப்பர் காடுகளில்
பால் சுரந்த போது
செம்பனைக் காடுகள்
எண்ணெய் வார்த்த போது
தன் கைரேகை
தேயத் தேய
தன் உதிரம் வற்ற வற்ற
உழைத்தவனுக்கு
தோட்ட முதலாளி
தோராயமாய்
கட்டித் தந்த வீடு
என் தாயின் கருவரை தாண்டி
நான் முதன் முதலாய்
கண் விழித்த வீடு..
அழுகை சத்தத்தோடு
நான் அவதரித்த வீடு
அம்மாவின் குறைவில்லா
அன்பில்
நான் ஆளான வீடு
அப்பாவின் அக்கறையில்
நான் கல்வி கற்ற வீடு
அண்ணனும் அக்காளும்
சண்டையிட்ட வீடு
அடுத்த கணமே
அன்பை அள்ளித் தந்த
அற்புத வீடு
வரலாறு வளர்த்த வீடு
வைராக்கியம் வகுத்த வீடு
இன்று
வரலாற்றின் வளர்ச்சியில்
காணாமல் போன வீடு
நாகரீக நெருடலில்
நகர்ந்து போன வீடு
நினைவில் மட்டும்
நிலைத்த வீடு
அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வீடு
அவர்கள் மாய்ந்த வீடு
எட்டி மட்டும்
நின்று பார்க்க் முடிந்த வீடு
நான் வாழ்ந்த
தோட்டத்து வீடு
என் ஏக்கம் நிறைந்த வீடு
நாங்கள் வாழ்ந்த கதை
சொல்லும் வீடு
எங்கள் வாழ்க்கையில்
வசந்தம் தந்த வீடு…!
இன்று
எங்கள் வரலாற்றில் மட்டும்
வாழும் வீடு!
அன்புடன்
அருள்செல்வன் என்ற
ஜோன்சன் மதலைமுத்து
மலேசியா