
2024 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.
ஏறக்குறைய 11 ஆண்டுகளாக பலமுறை ஐ.சி.சி போட்டிகளின் பைனல், அரையிறுதிவரை சென்றிருந்த இந்திய அணி, 11 ஆண்டுகள் பஞ்சத்துக்குப்பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பல அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு இந்த உலகக் கோப்பையில் விளையாடிய நிலையில் அனைத்தும் இந்த வெற்றி மூலம் விலகியுள்ளன.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு, அணியில் இருந்த ப்ளேயிங் லெவன் அனைவருமே காரணம். இருப்பினும் கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, அவர் வீசிய கடைசி ஓவர், பும்ராவின் கடைசி இரு ஓவர்கள், அர்ஷ்தீப் வீசிய ஓவர், சூர்யகுமார் பிடித்த கேட்ச் என அனைத்துமே திருப்புமுனையாக அமைந்தன.
இந்திய அணியின் தடுமாற்றம்
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார், கோலி, ரோஹித் ஆட்டத்தைத் தொடங்கினர். பவர்பளே ஓவரிலேயே கேசவ் மகராஜ் ஓவரில் ரோஹித் (9),ரிஷப்பந்த் (0) ஆட்டமிழந்தனர். ரபாடா வீசிய 5-வது ஓவரில் சூர்யகுமார் (3) ஆட்டமிழக்கவே இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து அக்ஸர் படேல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது.
கோலி, அக்ஸர் படேல் அடுத்து விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர்.
விராட் கோலி நிதானமாக பேட் செய்த 4வது ஓவரில் கடைசியாக பவுண்டரி அடித்தார். அதன்பின் 6 ஓவர்களாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது.
இருவரும் மெதுவாக பேட் செய்ததால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது. சம்ஷி வீசிய 12வது ஓவரில் அக்ஸர் படேல் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.
ரபாடா வீசிய 13-வது ஓவரில் ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸரை அக்ஸர் படேல் விளாசியதையடுத்து, இந்திய அணி 100ரன்களை எட்டியது. அதே ஓவரில் அக்ஸர் படேல் 47 ரன்னில் ரன் அவுட் ஆகினார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அருமையாக ஆடிய அஸ்கர் 3 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். 4வது விக்கெட்டுக்கு கோலி, அக்ஸர் கூட்டணி 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
5வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். விராட் கோலி 48 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் ஃபார்மின்றி தவித்து வந்த கோலி முதல் அரைசதத்தை 48 பந்துகளில் பதிவு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் அடித்தது சிறப்பானது, தேவையான நேரத்தில் அடிக்கப்பட்டது.
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 13.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியநிலையில் அடுத்த 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது இந்திய அணி.
யான்சென் 19-வது ஓவரை வீசினார். 5வது பந்தில் கோலி ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 59 பந்துகளில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 128 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். 5வது விக்கெட்டுக்கு துபே-கோலி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
தென் ஆப்ரிக்கத் தரப்பில் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்ச்சி
177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஹென்ட்ரிக்ஸ், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா 2வது ஓவரை வீசினார், 3பந்திலேயே ஹென்ட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
3வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 12 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரி்க்கா. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது.
ஸ்டெப்ஸ், டீகாக் இருவரும் மெல்ல ஆட்டத்தை நகர்த்தி, ஸ்கோரை உயர்த்தினர். 7.1 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. அக்ஸர் படேல் வீசிய 9வது ஓவரில், ஸ்டெப்ஸ் ஃபுல்டாஸ் பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு 31 ரன்னில் க்ளீன் போல்டாகினார். 3வது விக்கெட்டுக்கு டீ காக், ஸ்டெப்ஸ் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து கிளாசன் களமிறங்கி, டீ காக்குடன் சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸர் விளாசி 10 ரன்களைச் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.
ஜடேஜா வீசிய 11வது ஓவரிலும், குல்தீப் வீசிய 12வது ஓவரிலும் கிளாசன் தலா ஒரு சிக்ஸர் விளாசினார். 12வது ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 100 ரன்களைக் கடந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 13வது ஓவரில் டீகாக் பவுண்டரி விளாசினர். அதே ஓவரின் 3வது பந்தில் ஃபைன் லெக் திசையில் அடித்த ஷாட்டை குல்தீப் கேட்ச் பிடிக்கவே டீ காக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கி, கிளாசனுடன் சேர்ந்தார்.
குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மில்லர் ஒருபவுண்டரி , சிக்ஸர் விளாசி ரன்ரேட் பதற்றத்தைத் தணித்தார். தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 36 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது.
அக்ஸர் விளாசிய 15வது ஓவரை கிளாசன் குறிவைத்தார். முதல் பந்தில் கிளாசன் பவுண்டரி அடித்தார், அடுத்த இரு பந்துகளை அக்ஸர் வைடாக வீசினார். 2வது பந்தில் கிளாசன் மேற்கூரையில் சிக்ஸர் விளாசினார். 4வது பந்தில் மீண்டும் கிளாசன் சிக்ஸர் விளாசினார். 5வது பந்தில் கிளாசன் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் கிளாசன் 24 ரன்களை விளாசி தேவைப்படும் ரன்களையும், பந்துகளையும் சமன் செய்து ஆட்டத்தை தென் ஆப்ரிக்கா பக்கம் திருப்பினார்.
டி20 உலகக் கோப்பை: ஆட்டம் தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து இந்திய அணியிடம் கைமாறிய தருணம்
கிளாசன் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் வெற்றி உறுதியில்லாததாக இருந்தது.
கடைசி 5 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள்தான் தேவைப்பட்டது.
பும்ரா வீசிய 16-வது ஓவரை வீச வந்தபின்புதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் கைமாறியது. 16-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்ரிக்காவை நெருக்கடியில் தள்ளினார்.
ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, கிளாசன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். ஆப்சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை கிளாசன் அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து 27 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில்5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி 18 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 18-வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் மில்லர் ரன் சேர்க்காமல் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார், 4வது பந்தில் யான்சென் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் தென் ஆப்ரிக்கா 2 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தது.
தேவைப்படும் ரன் 12 பந்துகளில் 20 ரன்களாக உயர்ந்தது நெருக்கடி அதிகரித்தது.
கேசவ் மகராஜ் அடுத்து களமிறங்கினார்.
அர்ஷ்தீப் சிங் 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்ரிக்காவை நெருக்கடியில் தள்ளினார்.
நெருக்கடி, அழுத்தம் வந்தாலே தென் ஆப்ரிக்கா தங்களின் இயல்பான குணத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது இந்த ஆட்டத்திலும் வெளியானது.
கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மில்லர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஹர்திக் பாண்டியாவீசிய முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச, எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று தூக்கிபோட்டு, மீண்டும் மைதானத்துக்குள் வந்து அருமையான கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்து ரபாடா களமிறங்கி பவுண்டரி அடித்தார். அடுத்தபந்தில் ஒரு ரன் எடுத்தனர். 3பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் கேசவ் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தை பாண்டியா வைடாக வீசினார். 2பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரபாடா தூக்கி அடித்த ஷாட்டை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். ரபாடா 4 ரன்னில் வெளியேறினார். கடைசி ஒரு பந்தில் நோர்க்கியா ஒரு ரன் எடுக்கவே தோல்வி தென் ஆப்ரிக்கா 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்று தருணம் வந்தது. 17 ஆண்டுகளுக்குப்பின் டி20 கோப்பையை வென்றது சாதித்தது.
இந்திய அணி வென்றவுடன் கேப்டன் ரோகித் சர்மா தரையில் படுத்து கைகளை வைத்து தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2023 உலகக் கோப்பையில் பைனல் வரை சென்று கோப்பையை தவறவிட்ட ரோகித் இந்த முறை அந்தத் தவறை செய்யவில்லை.
கடைசி ஓவரை வீசி வெற்றிக்கு துணை செய்த துணைக் கேப்டன் பாண்டியா, கண்ணீர் விட்டு அழுது மகிழ்ச்சியையும், அழுத்தத்தையும் ரீலீஸ் செய்தார். இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்திய அணி மோதும் இறுதிப்போட்டி என்றவுடன் ஆட்டத்தைப் பார்க்கவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருந்தனர். இந்திய அணி கோப்பையை வென்றவுடன் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார். டி20 தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில், “இதுதான் என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி. இதைத்தான் சாதிக்க விரும்பி்னோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஓட முடியாது என்பது ஒருநாள் நமக்குத் தெரியும். அது நடந்துவிட்டது. அடுத்த தலைமுறை அணியை வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. சில வியத்தகு வீரர்கள் வந்து அணியை வழிநடத்தி தேசியக் கொடியை உயரே பறக்கவிடுவார்கள்,” எனத் தெரிவித்தார்
இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த நொடி, கிரிக்கெட் என்பது மிகப்பெரிய மதம் போலக் கருதப்படும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் சார்பாக விளையாடும் அணிக்கு கேப்டனாக தலைமையேற்று விளையாடும் ரோஹித் சர்மாவிடம் பெரிதாக எந்தக் கொண்டாட்ட உணர்வும் இல்லை.
மைதானத்தில் படுத்தேவிட்டார். பின் ஆனந்தக் கண்ணீரில் தேம்பிய ஹர்திக் பாண்டியாவை ஆற்றுப்படுத்தினார், அதன் பின் சில நொடிகள் தனித்துச் சென்றுவிட்டார். அது ஒரு விடுதலை உணர்வு.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா எனப் பலருக்கும் ஒரு விடுதலை உணர்வு.
மகேந்திர சிங் தோனிக்கு பிறகு எந்த கேப்டனாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை, சுமார் 11 ஆண்டுகளாகப் பல அரையிறுதிகள், பல இறுதிப்போட்டிகள். ஆனால் கோப்பை மட்டும் கைகூடவே இல்லை.
ஒரே ஒரு முக்கியமான கேள்வி. ஏன் இந்தியா சாம்பியன் அணி?
அதற்கான சூசகமான பதிலை இந்தியா தனது தொடக்க போட்டியிலேயே சொல்லிவிட்டது.
இந்த உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, சேஸிங்கில் பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது. பாண்டியாவையும் பும்ராவையும் வைத்து பாகிஸ்தான் கதையை முடித்தது இந்தியா. ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
இதோ இறுதிப்போட்டி. தடைக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து சுமார் 32 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு இறுதிப்போட்டி எனும் இடத்திற்கு வந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.
இதற்கு முன் சமயங்களில் நம்பமுடியாத வகையில் தோல்வி அடைந்து நாக்-அவுட் போட்டிகளில் வெளியேறிய வரலாறு தென்னாப்ரிக்காவுக்கு உண்டு. இப்போது அந்தக் கோப்பையை ஏந்துவதற்கு பொன்னான தருணம்.
முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியாதான் வென்றது. அதன் பின்னர் ஐபிஎல் அறிமுகமான பிறகு டி20 கோப்பை கிடைக்காமல் தவித்தது கேள்விகளை எழுப்பியது. இதோ 17 ஆண்டுகள் கழித்து இந்தியா கையில் கோப்பை தவழ்கிறது.
Ed. | Year | Host(s) | Final venue | Final | Teams | Winning Captain | ||
Winner | Result | Runner-up | ||||||
1 | 2007 | South Africa | Wanderers Stadium, Johannesburg | India 157/5 (20 overs) | India won by 5 runs | Pakistan 152 all out (19.4 overs) | 12 | MS Dhoni |
2 | 2009 | England | Lord’s, London | Pakistan 139/2 (18.4 overs) | Pakistan won by 8 wickets | Sri Lanka 138/6 (20 overs) | 12 | Younis Khan |
3 | 2010 | West Indies | Kensington Oval, Bridgetown | England 148/3 (17 overs) | England won by 7 wickets | Australia 147/6 (20 overs) | 12 | Paul Collingwood |
4 | 2012 | Sri Lanka | R Premadasa Stadium, Colombo | West Indies 137/6 (20 overs) | West Indies won by 36 runs | Sri Lanka 101 all out (18.4 overs) | 12 | Daren Sammy |
5 | 2014 | Bangladesh | Sher-e-Bangla Stadium, Dhaka | Sri Lanka 134/4 (17.5 overs) | Sri Lanka won by 6 wickets | India 130/4 (20 overs) | 16 | Lasith Malinga |
6 | 2016 | India | Eden Gardens, Kolkata | West Indies 161/6 (19.4 overs) | West Indies won by 4 wickets | England 155/9 (20 overs) | 16 | Daren Sammy |
7 | 2021 | UAE Oman | Dubai International Stadium, Dubai | Australia 173/2 (18.5 overs) | Australia won by 8 wickets | New Zealand 172/4 (20 overs) | 16 | Aaron Finch |
8 | 2022 | Australia | Melbourne Cricket Ground, Melbourne | England 138/5 (19 overs) | England won by 5 wickets | Pakistan 137/8 (20 overs) | 16 | Jos Buttler |
9 | 2024 | West Indies United States | Kensington Oval, Bridgetown | India 176/7 (20) | India won by 7 runs | South Africa 169/8(20) | 20 | Rohit Sharma |