குளிர்தோய்ந்த நல்முகடதின் மீதில்
முகிலுலவி உறவெய்தும்
உயர்பறம்பெனும் இளந்தென்றல் தவழ் வெற்பின் உரிமைகொள்
வேந்தன் வேள்பாரி…!
ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் அமுதூட்டும் தாய்நிலை கண்ட கோமகன் அன்றோ…!
முன்னையோர் செப்பிய முறைமையில் செந்நெறி வழுவாது கண்ணிய கடமை பல நலந்திகழப் புரிந்து,
திண்ணிய நெஞ்சுரமெனும் திட்பமுடன்,
தம்மைச் சார்ந்தாருக்கு நிழல்தந்து குளுமை காட்டும் விருட்சமெனப் பண்புடன் சேர்த்தணைத்து உண்டியுடன் உயர்வாழ்வளித்த வள்ளல் அன்றோ…!
இரவலர்க்களிக்கும் அக்கொடை மடத்தில் சிறந்த நற்புகழோங்கி,
மேதினியில் நிகரில்லாச் சீர்நிறை சிறப்பெல்லாம் தனதாக்கி,
அச்சிறுகொடிக்கு நிலமூரும் தேரீந்த செல்வமகவோன்…!
செப்பமுற பறம்பும் தானீந்தான் வஞ்சனைத்துயர் மானுடவடிவதனில் தன்னைச் சூழ்ந்த நாளிலும்…!
வாழ்வுயர வரிசையளித்து
வானுலகு கொண்ட புகழுடம்போன் வேள்பாரி திறமது,
பரிதியின் செஞ்சுடர் நிலவுலகில் கைவிரிக்கும் நாள்முழுதும் நின்றிலங்கும்…!
இவண்,
முனைவர் ந.அரவிந்த்குமார்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூர், கோயம்புத்தூர்.