கவிதை
தலைப்பு – பாரியும் பனையும்.
பனை தமிழரின் ஆதி அடையாளம்.
பனை தமிழ் மொழியின் நிலைத்த அடையாளம்.
பனை பாரியின் மனிதப் பண்பின் அடையாளம்.
வளர் இளம் போந்தை போல்
வான் உயர ஓங்கிய வயங்கு ஒளிர் பனை போல்
வளர்க பாரி புகழ்.
பல்லுயிர் ஓம்பும் புகலிடம் பனை ஒப்ப பனையன் மகன் பாரி.
நெருப்பில் அழியாப் பனம்பழம் போல என்றும் அழியா நிலத்த புகழ் பாரி.
உயர் பனை போல்
எதிரிக்கு வளையா செங்குணத்தான் பாரி.
செங்கோலும் வெண்குடையுமில்லா
கருங்கோலும் பசுங்குடையும் கொண்ட தொல்குடி பாரி.
எல்லையில்லா பொருள் தரு வள்ளல் பாரி.
நஞ்சுமுறி பனங்குருத்து ஒப்ப பாரி.
பனங்கள்ளின் போதையை மிஞ்சும் பாதையாவான் பாரி.
பாணர் கூத்தர் பகைவரென கேட்போர்க்கு
இல்லை எனா வள்ளல் பாரி.
கபிலர் நாவில் நிலைத்த பாரி.
பனை தன்னை வெட்டுபவருக்கும் பலன் தருமாப்போல்
பாரி தன்னை சூழ்ச்சி செய்தவருக்கும் தலை தந்தானே.
காலத்தால் அழிக்க முடியாப் பனையன் மகன் பாரி.
முனைவர்.செ. மெஜிலா ஜீவி,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
இலக்குமிபுரம் கலை அறிவியல் கல்லூரி,
நெய்யூர்.
கன்னியாகுமரி மாவட்டம்
முனைவர்.செ. மெஜிலா ஜீவி,கன்னியாகுமரி மாவட்டம்