சென்னை என்பது பல ஊர்களின் தொகுப்பு, இந்த ஊர்கள் எல்லாம் பன்னெடுங்காலமாக விவசாய உற்பத்தியில் இருந்தவை, தொண்டை மண்டலத்தைச் சார்ந்த இந்த ஊர்களில் இருப்பது போல பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தமிழ்நாட்டின் பிற எந்த பகுதிகளிலும் கிடையாது காரணம் தமிழகத்தில் மூன்று மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் அதிகமான நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இந்த பகுதிகளுக்குள் வருகின்றன, எனவே இந்த அதிகப்படியான நீரைத் தேக்கி அதற்கு ஏற்ற ஒரு உற்பத்தி முறையை இந்த பகுதியில் உள்ள ஊர்கள் பன்னெடுங்காலமாக தன் அனுபவத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்றன, ஒரு ஏரி அந்த ஏரி நிரம்பி மறுகால் போனால் அது சென்று சேருவது இன்னொரு ஏரி அது நிரம்பி அடுத்த ஏரி பிறகு அந்தந்த ஊர்களில் உள்ள குளங்கள் இப்படியாக சென்னை நகரின் மேற்கிலிருந்து கிழக்காக கடல் மட்டத்தை நோக்கி இறங்கி வேளச்சேரி மாதிரி சதுப்பு நிலக்காடுகளுக்குள் புகுந்து கடலில் கலக்கிறது..
இது ஒரு சிஸ்டம் அன்றைக்கு இருந்த உற்பத்தி முறைக்கும் அந்த மக்கள் தொகைக்கும் ஊர்களின் தொகுப்பிற்கும் நில அமைப்பிற்கும் ஏற்றார் போல ஏரிகளையும் சிறிய பெரிய நீர் வழித்தடங்களையும் அமைத்து எவ்வளவு பெருவெள்ளம் வந்தாலும் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு வாழ்க்கை முறையை அனுபவத்தில் கட்டி இருந்தனர். அந்த சமூக அமைப்பில் குறைகள் இருந்ததா என்றால் இருந்தது ஆனால் அவர்களை விட நாகரிகமான சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் என்ன செய்திருக்கிறோம் நாம் அவர்களை விட சிறப்பாக நீரை கையாண்டிருக்கின்றோமா? செம்பரம்பாக்கம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் அதிலிருந்து அடையாறு ஆற்றில் வழியும் நீர்த் தடத்தில் அனகாபுதூர் 18 மீட்டர் இன்னும் கொஞ்சம் கிழக்காக கீழே இறங்கி கரையின் இருபுறங்களில் இருக்கும் நந்தம்பாக்கம் நெசப்பாக்கம் 15 மீட்டர் இன்னும் கிழக்காக இறங்கினால் நந்தனம் கோட்டூர்புரம் 11 மீட்டர் இப்படியாக இறங்கித்தான் அடையாறு ஆறு இறுதியாக கடலில் கலக்கிறது..
இதே போல மேலே கிழக்கே கூவம் ஏரி 61 மீட்டர் அது கிழக்காக கீழ இறங்கி மதுரவாயல் 16 மீட்டர் நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு 11 மீட்டர் இன்னும் கீழிறங்கி சிந்தாதிரிப்பேட்டை 8 மீட்டர், இந்த வழித்தடங்களில் எல்லாம் பல்வேறு ஏரிகள் சிறு குளங்களை நிரப்பி கீழ் இறங்கி இறுதியாக கடலில் கலக்கிறது, இன்னும் மேலே சென்றால் பூண்டி ஏரி 37 மீட்டர் அங்கிருந்து இறங்கி சோழவரம் ஏரி 16 மீட்டர் இதிலிருந்து கொசஸ்தலை ஆறு 11 மீட்டர் உயரம் மணலி எண்ணூர் என்று இறங்கி கடலில் கலக்கிறது, இப்படியாக கடல் மட்டத்தை கணக்கிட்டு ஏரிகளும் நீர் வழித்தடங்களும் அமைக்கப்பெற்று நீரைப் பெற்று கடலில் நீரை வெளியேற்றும் அமைப்பாக இருந்து வந்திருக்கிறது.. இப்படி முறையாக இருந்த ஏரிகளும் அதன் நீர் வழித்தடங்களும் அன்றைக்கு இந்த ஊர்களில் இருந்த மக்கள் தொகைக்கும் அதன் விவசாய நிலங்களுக்கும் ஏற்றவை,
இன்றைக்கு நவீன புதிய குடியேற்றம் நகரமயமாக்கல் என்று சென்னை உருவாகி விட்டது.. அன்றைக்கு இந்த ஊர்களில் இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்றைக்கு குடியிருப்புகள் பிளாட்டுகள் அப்பார்ட்மெண்டுகள், அப்போதிருந்த விளைச்சல் அற்ற நிலங்கள் முழுவதும் இன்றைக்கு கான்க்கிரீட் கட்டடங்களாக இருக்கிறது, அப்போது அந்த பரப்பில் விழும் மழை நீரும் வழிந்து கொண்டு இந்த ஆறுகளை நோக்கித் தான் வரும், நகரமயமாக்கல் இன்னும் அதிக நீரை வெளியேற்ற வேண்டிய தேவை இந்த ஆறுகளுக்கு வந்துவிடுகிறது. இந்த அடிப்படை அறிவு புரிதல் இருந்தால் இந்த ஆறுகள் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு புதிய குடியேற்றங்கள் அதற்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டு இருக்கும்.. ஆனால் நாம் என்ன செய்தோம் ஏற்கனவே இருக்கும் ஆறுகளை எல்லாம் சுருக்கி பல நீர்வழித்தடங்களை அழித்து நீர்ப்பிடிப்பு ஏரிகளையும் அழித்து காசை வாங்கிக்கொண்டு கையெழுத்தா போட்டு தள்ளிவிட்டோம்.. இப்போது வடகிழக்கு பருவமழையின் மொத்த நீரும் அதன் வழித்தடங்கள் மறுக்கப்பட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கங்கே மருகி திரின்றன…
350 ஆண்டுகளுக்குள் உருவான ஒரு புதிய நகரை கட்டுவதற்கான எந்த நீண்ட கால திட்டங்களையும் அறிவையும் நாம் இன்னும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.. எத்தனை லட்சம் மக்களுக்கான நீரை நாம் எங்கிருந்து பெறப்போகிறோம், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இந்த ஏரிகளை நீர் வழித்தடங்களை தொந்தரவு செய்யாமல் இத்தனை லட்சம் மக்களை எப்படி குடியேற்றப் போகிறோம் அவர்களுக்கான சாலைகளை சாக்கடை வசதிகளை எப்படி அமைக்க போகிறோம். என்ற புரிதலோடு ஒரு புதிய நகரை நாம் உருவாக்கி இருக்கிறோமா, கிழக்கிந்திய கம்பெனி சென்ற பிறகு நமக்கான புதிய அரசுகள் வந்துவிட்ட இந்த 75 ஆண்டுகளில் நாம் அதை நோக்கி நகர்ந்து இருக்கிறோமா? அப்படி ஒரு புரிதல் நமக்கு இருந்திருந்தால் இன்றைக்கு இந்த பெரு மழையில் இத்தனை லட்சம் மக்கள் இவ்வளவு அவதிக்கு உள்ளாவார்களா?
500 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் கடல் மட்ட உயர அறிவோடு ஏரியையும் அதன் வழித்தடங்களையும் அமைத்திருக்கிறான் ஆனால் நாம் அமைத்துக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்டங்கள் நீர் வெளியேற்றும் அமைப்புகள் இந்த அறிவோடு புரிதலோடு ஒருங்கிணைவோடு அமைக்கப்படுகின்றனவா அப்படி அமைக்கப்பட்டால் இப்படி இலட்சக்கணக்கான மக்கள் அவதியுறுவார்களா? சென்னைக்குள் போடப்பட்டிருக்கும் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மீட்டர் உயர்ந்து கொண்டிருக்கின்றன, குறைந்தபட்சம் சாலையைத் தோண்டி போடும் சிந்தனை வரக்கூட எத்தனை ஆண்டுகள் பிடிக்கிறது, இந்த சாலைகள் எத்தனை நீர்வழித்தடங்களை மறித்து இருக்கின்றன..
இப்போது கூட ஒரு நீண்ட கால நாட்டில் குறைந்தது அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தாங்கும் அளவிற்காவது எந்த திட்டத்தையாவது நம்முடைய அரசுகள் முன்வைக்கின்றனவா? ஒவ்வொரு ஆட்சியும் வருகிறது ஒவ்வொரு ஆட்சியிலும் உலக வங்கியில் இருந்து 4000, 5000 கோடி கடன் வாங்கி ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, அடுத்த ஆட்சியில் இன்னொரு கடன் இன்னொரு திட்டம் ஆனால் எதுவும் பிரச்சினையைத் தீர்க்கவில்லை.. பிரச்சினையின் மையத்தை நோக்கி அதை விவாதிக்காத அதை நோக்கி நீண்டகால நோக்கில் திட்டங்களை வகுக்காத செயல்படுத்தாத எந்த திட்டங்களும் எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்தாலும் எப்படி பலனைத் தரும் எப்போது நம்முடைய அரசுகள் அதை புரிந்து கொள்ளும்?
சென்னை நகருக்கான வாட்டர் பாலிசி என்ன? அதற்கென்று திட்டமிட்ட ஒரு சுற்றுச்சூழல் கொள்கை இருக்கலாமா வேண்டாமா, ஏரிகள் ஆறுகள், குளங்கள் சாலைகள், குடிதண்ணீர் விளையாட்டு மைதானங்கள், புதிய குடியேற்றங்கள், நீர் வழித்தடங்கள் கழிவுநீர் வெளியேற்றம் பற்றியெல்லாம தீர்மானகரமான ஒரு பார்வை வேண்டுமா கூடாதா?
அதைப்பற்றி ஒரு மக்கள் கூட்டம் கேள்வி எழுப்ப விவாதிக்க வேண்டுமா கூடாதா?
பழைய சென்னையில் இருந்த ஏரிகள்…! 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை.. இதில், சென்னையைச் சுற்றி இருந்தவை கணக்கில் எடுக்கப்படவில்லை….! இவற்றில், ஒரே ஒரு ஏரியாவது, இப்போது இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். 1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்) 2.தேனாம்பேட்டை ஏரி, 3.வியாசர்பாடி ஏரி, 4.முகப்பேர் ஏரி, 5.திருவேற்காடு ஏரி, 6.ஓட்டேரி, 7.மேடவாக்கம் ஏரி, 8.பள்ளிக்கரணை ஏரி, 9.போரூர் ஏரி, 10.ஆவடி ஏரி, 11.கொளத்தூர் ஏரி, 12.இரட்டை ஏரி, 13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 14.பெரும்பாக்கம் ஏரி, 15.பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்), 16.கல்லுக் குட்டை ஏரி, 17.வில்லிவாக்கம் ஏரி, 18.பாடிய நல்லூர் ஏரி, 19.வேம்பாக்கம் ஏரி, 20.பிச்சாட்டூர் ஏரி, 21.திருநின்றவூர் ஏரி, 22.பாக்கம் ஏரி, 23.விச்சூர் ஏரி, 24.முடிச்சூர் ஏரி, 24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் – ஸ்பர்டாங்க் ரோடு), 25.செம்பாக்கம் ஏரி, 26.சிட்லபாக்கம் ஏரி , 27.போரூர் ஏரி, 28.மாம்பலம் ஏரி, 29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி, 30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம், 31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்….. 32.ஆலப்பாக்கம் ஏரி, 33. வேப்பேரி, 34. விருகம்பாக்கம் ஏரி (தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு), 35. கோயம்பேடு சுழல் ஏரி, (கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்) 36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்) என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சித் தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன. இதில் சென்னை மாநகரத்தில் எதுவுமே இல்லை.

