இன்று ஒரு பாடல்
பரணியின் பார்வையில் சிவப்பிரகாசரின் நன்னெறி
பாடல் எண் 19 நாள் 27/11/2023
தென்றல் வரவு நல்லோர் வரவு புயல்வரவு பொல்லார் வரவு
நல்லோர் வரவால் நகைமுகம் கொண் டின் புறிஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் – வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர.
தளிரான இலைகளைக் கொண்ட மனங்கவரும் மாமரத்தை தென்றல் தழுவும் போது இலைகளின் அசைவு மனதிற்கு இதமாக இருக்கும். அதே மரத்தை புயல் வந்து அடிக்கும் போது மரம் இலைகளை உதிர்த்து தளர்வாய் காணப்படும். இது போல அறிவில் சிறந்தோரும் குணவான்களும் நம்மை நாடி வரும் போது நாம் மகிழ்வடைகின்றோம். அதே நேரம் கடுஞ்சொல் சொல்லக்கூடியவர்கள் வரும்போது நாம் வருத்தப்படுகின்றோம் என்பதே பாடல் தரும் பொருளாகும்.
மாமரம் என்பதும் மாவிலை என்பதும் மங்கலகரமானது என்று விசேட காலங்களில் விழாக் காலங்களில் வாசலில் தோரணமாய் கட்டுவதை அறிந்துள்ளோம். மாவிலை ஒரு கிருமி நாசினி என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதனை மரபுக்குள் வைத்து அதை ஒரு சம்பிரதாயமாக மாற்றி விட்டனர். மாவிலை கட்டப்பட்டு இருந்தால் அங்கே கெட்ட சக்திகள் அண்டாது என்பது போல, நல்லவனைக் கண்டால் கெட்டவர்கள் அஞ்சுவார்கள் என்ற பார்வையோடு, மாமரம் தன் கனிகளால் தளிர்களால் அதாவது அது தரும் பயன்களால் அனைவரையும் கவர்ந்திழுக்க, தென்றலின் செயல் என்பது போல நல்லவர்களைத் தேடித்தான் சான்றோரும் வருவார்கள் என்ற பொருளுரைப்படி, மற்றவர் நம்மை மதிக்கும் அளவுக்கு நம்மை நாம் நல்லவன் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பார்வை. இல்லையென்றால் உனது மனம் கெட்டு புயல்வந்து அடித்து மரத்திற்கே முடிவு வரும்சூழ்நிலையை நன்னெறி காட்டுகிறது.