*இன்று ஒரு பாடல்*
*பரணியின் பார்வையில் சிவப்பிரகாசரின் நன்னெறி.*
*பாடல் எண் 18 நாள் 26/11/2023* *இன்சொல்லால் இன்பம் வரும்* இன்சொல்லால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே -பொன்செய் அதிர்வளையாய் பொங்கா தழல்கதிரால் தண்ணென் கதிர்வரவால் பொங்கும் கடல்.
*பொருள்.* *பொன் வளையல் அணிந்தவளே! கடல் நீரானது சுடுகின்ற சூரியனால் எப்போதும் பொங்குவதில்லை. குளுமையான சந்திரனால் மட்டுமே பொங்குகிறது. அது மாதிரி கடுஞ்சொற்களை விட இன் சொல்லே உவகையைத் தரும் என்பதே பாடலின் பொருளாகும்.*
*சூரியனுக்கு ஒளி உண்டு. அது பிறவி யொளி. ஆனால் சந்திரனுக்கான ஒளி சூரியனிடம் இருந்து பெறுவதாகவே அறிகின்றோம். அப்படியானால் இதன் உள் அர்த்தம், சமுத்திரமோ கடலோ அவ்வளவு பரந்த நீர்பரப்பால் சூழப்பட்ட இந்த உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் இன்சொற்களால் மட்டுமே உவகை அடைவார்கள் என்பது, வாய்ச்சொல்லால் மட்டுமின்றி சொல்லப்படும் வார்த்தைகளின் செயலாக்கத்திலும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.*
* நன்றாக இரு என்ற சொல் இன்சொல் தான். அதனால் உவகை வந்து விடுமா என்றால் யோசனையும் வேண்டும். நன்றாய் இருப்பதற்கு உரிய வழியையும் செய்து கொடுக்கும் போது தான் வார்த்தையின் அர்த்தம் முழுமையாகிறது. ஆதலால் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து நல்வாழ்வுக்கு நல்லாதோர் செயலைச் செய்தால் வாழ்க்கை நலம் பெறும்.*
* காழ்ப்புணர்ச்சி இன்றி கருணையோடு கனிவாக மக்கள் இருந்தால் எதைச் சொன்னாலும் அது இன்சொல்லாகவே இருக்கும் என்பது பார்க்கப்படுகிறது. எப்படி சந்திரனுக்கு ஒளியானது சூரியனிலிருந்து கிடைத்ததோ அதே மாதிரி கடுஞ்சொல் உரைப்பவரையும் நமது செயலால் நெகிழ்வடையச் செய்தால் அப்போது இவர் உரைக்கும் வார்த்தையே உவகைதரும் என்று பார்வையாகிறது.*